shadow

அதிமுகவில் மீண்டும் இணைகின்றேனா? தங்கத்தமிழ்செல்வன் பதில்

18எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாம் நீதிபதியிடம் செல்லவுள்ள நிலையில் ஆண்டிப்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்த தொகுதியின் எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன், “தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற்று தேர்தலில் நின்று வெற்றி பெறுவேன். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. கட்சித் தாவல் தடை சட்டப்படி ஒரு உறுப்பினரை நீக்க வேண்டும் என்றால், அவர் கொறடா உத்தரவை மீறி வாக்களித்திருக்க வேண்டும் அல்லது தானாக முன்வந்து பதவி விலக வேண்டும். இரண்டையும் நாங்கள் செய்யவில்லை என்று கூறியுளார்.

ஆனால், இவற்றை செய்த துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட எம்எல்ஏக்கள் 11 பேருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எந்தத் தவறும் செய்யாத எங்களுக்கு பாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் நீதிமன்றத்தைக் கண்டித்து வழக்கை வாபஸ் பெறப் போகின்றேன். என் முடிவை தொகுதி மக்களிடம் தெரிவித்தேன். இந்த முடிவை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வழக்கை வாபஸ் பெற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால் வழக்கை வாபஸ் பெறாமல் சந்தியுங்கள் என மக்கள் தெரிவித்தனர். அதில் எனக்கு மனம் இல்லை. வாபஸ் பெறுவதுதான் என் முடிவு.

என் முடிவு குறித்து ஏற்கெனவே டிடிவி தினகரனிடம் சொல்லிவிட்டேன். நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விட்டதால் என் முடிவை அவர் ஏற்றுக்கொண்டார். தமிழக மக்கள் இந்தத் தீர்ப்பைப் பார்த்துச் சிரிக்கின்றனர். என் முடிவையே மற்ற 17 எம்எல்ஏக்களும் எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை செய்து முடிவெடுப்பர்.

சபாநாயகர் உத்தரவு செல்லும் என இரு நீதிபதிகளும் தீர்ப்பளித்திருந்தால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றிருக்க மாட்டோம். தேர்தலை சந்திப்போம். அதனால், தமிழக அரசுக்கு நெருக்கடி. செல்லாது என தீர்ப்பளித்திருந்தால் சட்டப்பேரவைக்கு சென்றிருப்போம். அப்போதும் அரசுக்கு தான் நெருக்கடி. மூன்றாவது நீதிபதி எப்போது நியமிக்கப்படுவார்? 10 நாட்களில் இந்த வழக்கு முடியும் என தலைமை நீதிபதி கூறியிருந்தால் நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன். இந்த வழக்கு 2 ஆண்டுகளுக்கு இழுத்தடிக்க வாய்ப்புள்ளது. மூன்றாவதாக நியமிக்கப்படும் நீதிபதி தலைமை நீதிபதியின் கருத்தையே முன்மொழிந்து அரசுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்குவார் என்பது என் கணிப்பு.

நாங்கள் அதிமுகவில் சேர வேண்டும் என நினைத்திருந்தால் ஏன் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறோம். சசிகலாதான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். அவரையே கட்சியில் இருந்து நீக்கும்போது தான் நாங்கள் வெளியேறினோம். ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது எங்களின் எண்ணமில்லை”

இவ்வாறு தங்க தமிழ்செல்வன் கூறினார்.

Leave a Reply