அக்ரலிக் அறைக்கலன்கள்

எல்லாத் துறைகளிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத பொருள்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. கட்டுமானத் தொழிலும் அதற்கு விதிவிலக்கல்ல. மாற்றுப் பொருள்களால் கட்டிடச் செலவும் குறைகிறது. சூற்றுச் சூழலுக்கும் நன்மை விளைகிறது. அதுபோல வீட்டு அறைக்கலன்களிலும் (Furniture) மாற்றுப் பொருள் வந்துவிட்டது. அறைக்கலன்கள் செய்ய இப்போது அக்ரலிக் என்னும் புதிய மாற்றுப் பொருளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

தொடக்க காலத்தில் அறைக்கலன்கள் என்றால் மரத்தால் செய்யப்பட்டவையாக மட்டும் இருந்தன. இப்போது பல விதமான பொருள்களில் அறைக்கலன்கள் வந்துள்ளன. கான்கிரீட்டிலேயே மேஜைகள்/இருக்கைகள் செய்யப்பட்டன. அடுத்ததாக பிளாஸ்டிக் மேஜைகள்/இருக்கைகள் வந்தன. தற்போது இந்த அக்ரலிக் என்னும் புதிய பொருளில் இருக்கைகள் வந்துள்ளன. இவை பிளாஸ்டிக் அறைக்கலன்களுக்குச் சரியான மாற்று எனலாம்.

பாலிமரை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பொருளான இது தற்போது உள் தடுப்புச் சுவர்களாகவும் அறைக்கலன்களாகவும் இந்த அக்ரலிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அக்ரலிக், கண்ணாடியைப் போல பளபளப்பும் ஒளியைக் கடத்தும் இயல்பும் கொண்டது. அதேவேளை சமயம் ஃபைபரைவிட வலிமையானது. இவற்றை மிக எளிதாக அறுக்க முடியும். அதனால் அக்ரலிக் தடுப்புகள் வீட்டின் அளவுக்கு ஏற்றாற்போல் வெட்டிப் பயன்படுத்த ஏதுவானது.

அக்ரலிக் இப்போது மீன் தொட்டிகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. கண்ணாடியைப் போல இருப்பதால் இவை உடைந்துவிடுமோ என அச்சப்படத் தேவையில்லை. இவை எளிதில் உடையாது. தடுப்புச் சுவர், அறைக்கலன்கள் மட்டுமல்லாது கதவு, ஜன்னலாகவும் அக்ரலிக் பயன்படுத்தப்படுகிறது.

வீடுகளுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்றாலும் இப்போது அக்ரலிக் பெரும்பாலும் அலுவலக இன்டீரியர்களுக்குத்தான் பயன்படுகின்றன. சோஃபா, சாப்பாடு மேஜை, இருக்கைகள், அலமாரிகள், ஊஞ்சல் என இன்னும் பலவிதமான அறைக்கலன்கள் அக்ரலிக்கால் செய்யப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன.

என்னதான் இம்மாதிரியான புதிய பொருட்கள் சந்தைக்கு வந்தாலும் மர அறைக்கலன்கள்தான் நீடித்த உழைப்பைக் கொண்டவை என ஆணித்தரமாக நம்புவோம். ஆனால், மர அறைக்கலன்களுடன் ஒப்பிட்டால் அக்ரலிக் அறைக்கலன்கள் கையாள்வதற்கு எளிது. பொருட்செலவும் அதிகம் ஆகாது. மேலும், இது மறுசுழற்சிக்கு ஏற்றது. அதனால், சுற்றுப்புறத்திற்கும் உகந்தது.

அக்ரலிக் அறைக்கலன்கள் தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்பட்டுவருவதால் அவை நேர்த்தியான வடிவமைப்புடன் இருக்கும். தயாரிப்பும் மேம்பட்டு இருக்கும். மேலும் இவை பராமரிப்புக்கும் எளிதானது. இந்தியாவிலேயே இப்போது அக்ரலிக் அறைக்கலன்கள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகை அறைக்கலன்கள் அலுவலகங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டுக்கு ஏற்றவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *