ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளால் ஏற்படும் பயங்கர் பாதிப்புகள்!

25மாலை… வேலை முடிந்து வீடு செல்லும்போது, சாலை ஓரங்களில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் கடைகளின் வாசலில், வியர்வையில் குளித்த மாஸ்டர்கள் ‘டங்… டங்… டங்கென’ கல்லில் தாளமிடுவது முதலில் நம் காதை இழுக்கும், அதனோடு சேர்ந்து வரும் மசாலா வாசம் நம் நாசியை நிறைக்கும். மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல பர்ஸைப் பார்த்துக்கொண்டே கடைக்குள் நுழைவோம். கடாயில் பாமாயிலை ஊற்றி பலவகை மசாலாக்களைத் தூவி, நூடுல்ஸையும் ஃப்ரைடு ரைஸையும் அந்தரத்தில் தூக்கியடித்துப் பிடிக்கும் சாகசத்தை வியந்தபடியே, நான்கு ஐட்டங்களை உள்ளே தள்ளுவோம். வீட்டுப் பாசத்தில் கொஞ்சம் பார்சல் கட்டுவோம். 100 ரூபாயில் வயிறும் மனமும் நிரம்பிவிட்ட சந்தோஷத்தில் கிளம்புவோம்.

இந்தத் துரித உணவுகளில் எவ்வளவு ஆபத்து ஒளிந்துள்ளது என்பதை நாம் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் பார்த்திருக்கிறோம்தான். ஆனாலும், நாவில் நீர் ஊறும்போது நம் மனஉறுதி அனைத்தும் குலைந்துபோகும். `எப்பவுமா சாப்பிடறோம்; எப்பவாவதுதானே?’ எனப் போலி சமாதானம் செய்துகொள்வோம்.

இப்போது, சிறிய பெட்டிக்கடையில் ஆரம்பித்து பெரிய மளிகைக்கடை வரை, வாசலை ஆக்கிரமித்து சரம் சரமாகத் தொங்கிக் கொண்டிருப்பவை மசாலா ஐட்டங்கள்தான். மிளகாய்த்தூள், ரசப்பொடி போன்றவற்றுடன் ஃபிரைடு ரைஸ் பவுடர், சிக்கன் டீப் ஃபிரை பவுடர் என பல ஆரக்கிரமித்துள்ளன. தெருக்கடைகள் வரை இருந்த ஃபாஸ்ட் ஃபுட் மோகம் வீடுகள் வரை வந்துவிட்டன. பரோட்டா, கொத்து பரோட்டா, தந்தூரி சிக்கன், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ்… என நகர மக்களை மட்டுமே கிறங்கடித்த ஃபாஸ்ட் ஃபுட் மோகம் இன்று கிராமங்கள் வரை சென்றுவிட்டதற்கு இந்த மசாலாப் பொருட்கள் விற்பனை ஒரு சாட்சி.

உண்மையில் துரித உணவுகள் அனைத்துமே முற்றிலும் தீமையானவைதானா… துரித உணவுகளைச் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?

துரித உணவுகள் தயாரிக்க பல சுவையூட்டிகள், மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. முதலில் இவை ஆரோக்கியமானவையா என்பதைவிட எழும் கேள்வி இவை தரமானவைதானா என்பதுதான். விலை குறைவாகக் கொடுக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் மலிவு விலையில் கிடைக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்தது, அது தயாரிக்கும் விதம், ஆரோக்கியமற்ற முறையில், சுகாதாரமற்ற சூழலில்தான் பெரும்பாலான துரித உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

எம்.எஸ்.ஜி தவிர்ப்போம்!

துரித உணவுகளில் சுவைக்காகப் பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜி (Mono sodium glutamate) அல்லது சோடா உப்பு பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்போம். இது கெட்ச்அப், தக்காளி சாஸ், நூடுல்ஸின் சுவையைக் கூட்டும் தன்மையுடையது. இது கலக்கப்படும் உணவை ஒருமுறை உட்கொண்டால், மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும் அடிக்ட்டிவ் தன்மைகொண்டது. அதனாலேயே, இது பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. சோடா உப்பில் சோடியம் பைகார்போனேட் உள்ளது. எம்.எஸ்.ஜி மற்றும் சோடா உப்பு இரண்டிலுமே சோடியம் அதிகமாக உள்ளது. நமது உடலில் 60 முதல் 70 சதவிகிதம் தண்ணீர் இருக்க வேண்டும். உடலில் சோடியம் அதிகமானால், உடலின் நீர் அளவு அதிகமாகிறது. இதனால், குறுகிய காலத்தில் அதிக எடை கூடி ஊளைச் சதை உருவாகிறது.

ஆரோக்கியமற்ற எண்ணெய்

எண்ணெய், நிறைவுற்ற கொழுப்பு அமிலம் (Saturated fatty acids), ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Mono unsaturated fatty acids), பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Poly unsaturated fatty acids) என மூன்றுவிதமாகப் பிரிக்கப்படுகிறது. இந்தப் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்தான் `அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் (Essential fatty acids)’ எனப்படுகிறது. நிறைவுற்ற கொழுப்பு அமிலம் அதிகமாகும்போது, அது கொழுப்பாக மாறி உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும். எனவே, இதை `கெட்ட கொழுப்பு’ எனலாம். ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகரிக்கும்போது, நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் ரத்தம் உறைவதைத் தடுக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே, இவை இரண்டும் நல்ல கொழுப்பு எனக் கூறலாம். பொதுவாக, சுத்திகரிக்கப்படாத நாட்டு எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு அமிலம் குறைவாகவும், மற்ற இரண்டு கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் இருக்கும்.

ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் பாமாயிலை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஒரு முறைக்கு மேல் தொடர்ந்து சூடுபடுத்தும்போது அதில் நிறைவுற்ற கொழுப்பு அமிலம் அதிகரித்து ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், திரும்பத் திரும்ப சூடுபடுத்துவதால், `டிரான்ஸ்ஃபேட்’ எனும் அமில மாற்றம் நடக்கிறது. இதன்மூலம் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பாக மாறுகிறது. இது உடலில் சேரச் சேர இதயக் குழாய் அடைப்பு, சிறுகுடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

மைதா என்னும் எமன்

நம் மக்களிடம் உள்ள அறியாமையே பளபளப்பாக இருந்தால் சுத்திகரிக்கப்பட்ட பொருள் என்ற எண்ணம்தான். அதனாலேயே நிறத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர் வியாபாரிகள். பெட்ரோலை சுத்திகரிக்க அரேபிய நாடுகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருளான டெர்ஷியரிபட்டைல் ஹைட்ரோகுயினோன் (Tertiary butylhydroquinone (TBHQ)) இங்கு மைதா மாவை வெண்மை யாக்கப் பயன்படுத் தப்படுகிறது. மைதாவின் மென்மைக்காக அலாக்சின் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. மைதா, எந்தச் சத்துகளும் அற்ற குப்பை மாவாகும். இதனால், உடலுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த கலோரிகள் உடல்பருமனைக் கூட்டும். கோதுமையின் தோலில் பி காம்ப்ளெக்ஸ், புரதம், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. வேதிப் பொருட்களைச் சேர்த்து, பலகட்ட பதப்படுத்தலுக்குப் பின் இந்தச் சத்துக்களை எல்லாம் நீக்கி, ரீஃபைண்டு மாவாகத் தரப்படுவதுதான் மைதா. பசியோடு இருக்கும்போது பரோட்டா சாப்பிடும்போது அவற்றைக் கொழுப்பாக மாற்றி அடிவயிற்றில் சேமித்துக்கொள்ளும். வருடக்கணக்கில் சேமிக்கப்படும் கொழுப்பு, பெருத்த தொப்பையுடன், உடல்பருமன், இதயக்கோளாறு, சர்க்கரைநோயை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *